தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆகிய 4 மண்டலங்கள மக்களின் பிரதான பிரச்னைகள் மற்றும் தேவைகள், அரசியல் கட்சிகளுக்கான ஆதரவுகள் குறித்து கடந்த பதிவுகளில் தெளிவாக பார்த்தோம். 

தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் AZ  ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சென்னை மக்களின் பிரச்னைகள் மற்றும் அவர்களது ஆதரவு குறித்து பார்ப்போம். 

சென்னையில் பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால், எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் ஆதிக்க சமூகம் என்று கூற இயலாது. சென்னையை பொறுத்தமட்டில் குடிநீர் பிரச்னை பெரிய பிரச்னையாக உள்ளதாக 13% சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர். 

வேலைவாய்ப்பிற்காக தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து அதிகமானோர் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில், 7% பேர் வேலைவாய்ப்பின்மையை குறிப்பிட்டுள்ளனர். லஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 12% பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னையில், ரஜினிகாந்திற்கு கிடைத்துள்ள ஆதரவு திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளில் குறிப்பிடத்தகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் 42% வாக்குகளை பெற்ற அதிமுகவிற்கு தற்போது 28% ஆதரவே உள்ளது. அதேபோல திமுகவிற்கான ஆதரவும் 9% குறைந்து 23% ஆக உள்ளது. 

ரஜினிகாந்திற்கு 19% சென்னை மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனுக்கு 5% பேரின் ஆதரவு உள்ளது. 

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை காட்டிலும் பாஜகவிற்கு சென்னையில் கணிசமான ஆதரவு உள்ளது. 7% சென்னைவாசிகள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 18% சென்னை மக்கள், பாஜகவுடன் ரஜினிகாந்த் கைகோர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.