Rajinikanth enter in to politics..create power centre

அடுத்த சட்டமன்ற தேர்தலின் போதுதான் கட்சி ஆரம்பிக்கப்படும். அதுவரை அரசியல், போராட்டம், ஆர்பாட்டம் எதுவும் வேண்டாம்.’ என்று ரஜினி பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டாலும் கூட, உறுப்பினர் சேர்ப்பில் துவங்கி பல விஷயங்கள் அவரது கட்சிக்காக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

தம்மாத்துண்டு சுயேட்சை வேட்பாளர் பிரச்சாரத்துக்கே சீன் போடவும்! சவுண்டு விடவும், ஆட்கள் இருக்கும்போது ரஜினி ஆரம்பிக்கிற கட்சியை தேடி ரவுசு பேர்வழிகள் வரிசை கட்டி வராமல் இருப்பார்களா? அந்த வகையில் தினமும் போயஸ் கார்டன் வீட்டுக்கும், ராகவேந்திரா மண்டபத்துக்கும் பலர் போட்டி போட்டு காவடி தூக்கி வருகின்றனர். 

இதில் போயஸ் வீடு பக்கம் பெரும்பான்மையானவர்களை அனுமதிப்பதேயில்லையாம் செக்யூரிட்டிகள். ஆனால் சென்னை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஒரு இரட்டை சகோதரர்களுக்கு மட்டும் அநியாயத்துக்கு அனுமதியும், சல்யூட்டும் வந்து விழுகிறதாம் போயஸ் செக்யூரிட்டியில் துவங்கி, மண்டபத்து ஊழியர்கள் வரை. 

எப்படி இந்த மாயம்? என்று விசாரித்தால் அந்த சகோதரர்கள் பண்டிகை காலங்கள் வந்தால் ராகவேந்திரா மண்டப ஊழியர்களில் துவங்கி போயஸ் செக்யூரிட்டி வரை அத்தனை பேரையும் வீடுகளுக்கே சென்று வகையாக கவனித்துவிடுவதுதானாம். நெடுங்காலமாக செய்து கொண்டிருந்த இந்த கவனிப்பின் காரணமாக, ரஜினி அரசியல் அஸ்திரத்தை எடுத்திருக்கும் தற்காலத்தில் மிக எளிதாக போயஸுக்குள்ளோ, மண்டபத்தினுள்ளோ ஊடுருவ இந்த சகோதரர்களுக்கு அனுமதி கிடைத்துவிடுகிறதாம். அதுமட்டுமல்ல கேட்டை திறந்துவிடுகையில் முழு மரியாதையுடன் அனுமதி கிடைக்கிறதாம். 

இதை மேற்கோள்காட்டி புலம்பும் மற்ற நிர்வாகிகள் ‘தலைவர் இன்னும் கட்சியே துவங்கலை. ஆனா அதுக்குள்ளே கவனிக்க வேண்டியவங்களை கவனிச்சு எப்படியான அதிகார மையங்களெல்லாம் உருவாகுதுன்னு பாருங்க. மத்த கட்சி மாதிரியே நம்ம கட்சியும் ‘கவனிப்பு, அன்பளிப்பு, வரவேற்பு’ன்னு இருந்தால் எப்படி உருப்புடும்?’ என்று கொந்தளிக்கிறார்களாம். 

வெளங்கிடும்!