கடந்த ஜனவரி 5 ஆம் தேதி, வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே லட்சுமிபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சாலைத் தடுப்பில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் மகேந்திரன்  உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளராக இருந்தார்.  இவருடன் அருண்குமார், ராஜசேகர், வெங்கடேசன், தமிழ் ஆகியோரும் பயணித்தனர். இவர்கள் அனைவரும் சென்னை தி.நகரில் உள்ள ரஜினி மக்கள் மன்றக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தனர். 

அதை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த சூழலில் கார் விபத்தில் சிக்கியது. காயமடைந்தவர்கள் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த் பெயரில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மிகப்பெரிய அளவிலான இரத்ததான முகாமை நடத்தி காட்டினார் மகேந்திரன். பல சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த  அவர் மறைந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் நிதியுதவி அளித்தார்.