அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு ரஜினியை பார்த்து மு.க.ஸ்டாலின் டென்சன் ஆவதற்கான காரணத்தை மு.க.அழகிரி வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக ரஜினியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தவர் ரஜினி. மேலும் முரசொலி பவளவிழாவிலும் ரஜினியை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரப்படுத்தினார் ஸ்டாலின். இந்த அளவிற்கு ரஜினியுடன் நட்பு பாராட்டி வந்தவர் ஸ்டாலின் ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பிறகு எல்லாமே தலை கீழாகிவிட்டது. அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி உடனடியாக கலைஞரை சென்று சந்தித்து ஆசி பெற விரும்பினார்.

ஆனால் கலைஞரை சந்திக்க ரஜினிக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.  பின்னர் கலைஞரை சந்திக்க ரஜினிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியான பிறகே கலைஞரை ரஜினியால் சந்திக்க முடிந்தது. ரஜினி கலைஞரை சந்திக்கும் போது உடன் இருந்த ஸ்டாலின் முகத்தில் அவ்வளவு எரிச்சல் இருந்தது. ரஜினி கலைஞரை சந்தித்துவிட்டு சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்று சம்பந்தமே இல்லாமல் பேசினார். அதன் பின்னரும் கூட ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் போதும் ஸ்டாலின் எரிச்சலாகவே பதில் அளித்தார்.  இவற்றுக்கு எல்லாம் உச்சமாக, கலைஞருக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் வந்த ரஜினியை வீட்டுக்குள் விடாமல் திருப்பி அனுப்பினர். இந்த அளவிற்கு ரஜினி மீது ஸ்டாலின் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு கோபத்திற்கு என்ன காரணம் என்று பலரும் பட்டமன்றமே நடத்தி வந்தனர். இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அழகிரி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில், தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பலர் ரஜினியுடன் தொடர்பில் இருப்பதாக அழகிரி கூறியிருந்தார். ரஜினிக்கு தி.மு.கவிலேயே சிலர் ஆதரவாக இருப்பது தான் அவர் மீதான ஸ்டாலினின் எரிச்சலுக்கு காரணம் என்பதையே அழகிரியின் பேட்டி உணர்த்துவதாக சமூகவலைதளங்களில் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.