ரஜினிக்கு இப்போது நேரம் சரியில்லை!  தெற்கே கால் வைத்தால் அது வடகிழக்காக இழுத்துப் போய்க் கொண்டிருக்கிறது. விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு காரணமே ரஜினிதான்! என்று யாரோ கொளுத்திப் போட, அது கோடம்பாக்கத்தினுள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளது. விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் பட்டாளமொன்று ரஜினியை முறைக்க துவங்க, மனுஷன் தனி தீவாகிப் போயிருக்கிறார். 

எப்போதுமே சக ஹீரோக்களை பற்றி குறை சொல்லி, அவர்களின் மனதை புண்ணாக்கிப் பார்க்கும் புத்தியில்லாதவர் ரஜினி. ஆனால் இந்த ரெய்டு விவகாரத்தில் அவரது கை உள்ளதோ அல்லது இல்லையோ, ஆனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது மட்டும் உண்மை. இந்த நேரத்தில் தொழில் ரீதியாகவும் ரஜினிக்கு சூழல் சரியில்லை! என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். குறிப்பாக சமீபத்தில் ரஜினியின் சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் ஒருவர் கை வைத்த விவகாரம் அவரை மிகவும் காயப்படுத்தி, கடுப்பாக்கி விட்டதாம். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. 

இதன் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன் தாரா, மீனா, குஷ்பு, சூரி என பெரும் பட்டாளமே நடிக்கிறது. நட்சத்திரங்களின் சம்பள செலவே மிக மிக அதிகமாக இருப்பதால் பட்ஜெட் விஷயத்தில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மிக தெளிவாக இருக்கிறாராம். ரஜினி படங்களை பொறுத்தவரையில் ஹீரோவின் சம்பளத்தையும் பட்ஜெட்டினுள் சேர்க்க முடியாத சூழல் கடந்த சில வருடங்களாக உருவாகியுள்ளது. ரஜினியின் சம்பளத்தை வைத்து மட்டும் லோ பட்ஜெட்டில் குறைந்தது ஐந்து படங்கள் எடுத்துவிடலாம் என்கிறார்கள். அப்படியானால் அவரது சம்பளத்தை யோசியுங்கள். 


ஆனால் அதேவேளையில் கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கவில்லை. ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ்  இதற்கு முன் ‘பேட்ட’ எடுத்தது. ஆனால் அப்படம், 2019ம் ஆண்டு வசூலில் வெளுத்துக் கட்டிய படங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில்தான் வந்து நின்றது. பிகில், விஸ்வாசத்துக்கு பின் தான் பேட்ட வந்தது.
 இந்த பொங்கலுக்கு வெளியான ரஜினியின் ‘தர்பார்’ படமோ ‘நஷ்டம்’ என்று விநியோகஸ்தர்களாக் கரித்துக் கொட்டப்பட்டு, அவர்கள் ரஜினியின் வீட்டுக்கே சென்று நின்று நியாயம் கேட்குமளவுக்கு போய்விட்டது. இதன் மூலம் தென்னிந்திய சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு டாக் உருவாகி இருக்கிறது அது......’ரஜினி படங்கள் பரபரப்பாக பேசப்படலாம். ஆனால் அவற்றால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. வசூல் மன்னன்! எனும் பட்டத்தை ரஜினி விஜய் மற்றும் அஜித்திடம் இழந்துவிட்டார். ‘ என்பதுதான். 

மேற்படி டயலாக் கலாநிதி மாறனின் காதுகளுக்கு மட்டும் போயிருக்காதா என்ன? விளைவு, தான் தயாரிக்கும் புதிய படத்துக்காக ரஜினியோடு ஒப்பந்தம் போட்டவர் அதன் படி முதற்கட்ட தொகையை துவக்கத்திலேயே தந்துவிட்டாராம். ஆனால் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்த நிலையில், இப்போதிருக்கும் பிரச்னையை வைத்து இரண்டாம் கட்ட சம்பள செட்டில்மெண்டின் போது ‘உங்க சம்பளம் ரொம்ப ஹையாக இருக்குது. ஆனால் அந்தளவுக்கு படம் விற்க மாட்டேங்குது. தர்பார் பிரச்னையால் நம்ம படத்துக்கு முடிஞ்சளவுக்கு விநியோகஸ்தர்கள் பிரச்னை கொடுப்பாங்க. அதனால எங்க ரிஸ்க்லதான் டிஸ்ட்ரிபியூட் பண்ணனும். ரிசல்ட் எப்படி இருக்குமோ! ப்ளீஸ் சம்பளத்தை கம்மி பண்ணுங்க!’ என்று சொல்லி செலவு விபரங்கள், தர்பார் வசூல் ஆகியவை அடங்கிய ஒரு பிரேக் - அப் ஃபைலை கொடுத்து ரஜினியிடம் தெரிவித்திருக்கிறாராம். 

கலாநிதி மாறன் தன் சம்பளத்தில் கை வைத்துவிட்டது ரஜினிக்கு கடும் கோபமாம். ‘என்னா கணக்கு இது? என் படம் பிய்ச்சுக்கிட்டு ஓடி, கொட்டோ கொட்டுன்னு பணம் கொட்டுறப்ப நான் அந்த லாபத்துல பங்கு கேட்கவா செய்றேன்? எல்லாரும் சம்பாதிச்சு, சந்தோஷமா இருக்கட்டும்னு விட்டுடுறேன்! அந்த மனசை யாருமே ஏன் பார்க்கிறதில்லை? என்னா வேணும் இவங்களுக்கு?’ என்று கடுப்பும், வெறுப்புமாய் பேசியிருக்கிறார். 
மாறன் பிரதர்ஸில் அண்ணன் இப்படி ரஜினியை காயப்படுத்தியது பத்தாது என்று, தம்பி தயாநிதி மாறனும் நடிகர் விஜய் மீதான ரெய்டு விவகாரத்தில் விஜய் மீதான ரெய்டின் பின்னணியில் அரசியல் காரணங்களே இருக்கிறது! என்று பேசியிருப்பது ரஜினியை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஆக இப்படி மாறன் பிரதர்ஸிடம் மாட்டிக் கொண்டு மண்டை காய்கிறார் ரஜினி! என்கிறார்கள் அவரது நண்பர்கள். ஆனால் ரஜினியின் அலுவலக விஷயங்களைக் கவனிக்கும் நபர்களோ, ’ரஜினி சாரின் சம்பளத்தில் கை வைப்பதா?! வாய்ப்பே இல்லை. அவரைப் பற்றிய பல வதந்திகளில் இதுவும் ஒன்று. இந்த வயதிலும் அவருக்குன்னு  மிக மிகப்பெரிய மார்க்கெட் இருக்கப்போய்தான் பெரிய பேனர்கள் அவரை தேடி வந்து படம் பண்ணுறாங்க. அதனால் தனக்கான நியாயமான சம்பளத்தை ஃபிக்ஸ் பண்ணிட்டுதான் நடிக்க போகிறார். அதைத்தாண்டி ஒரு ரூபாய் கூட அதிகம் கேட்கவும் மாட்டார், குறைக்கவும் மாட்டார்!  தொழிலில் ஜென்டில்மேன்!” என்கின்றனர். யார் சொல்றதுபா உண்மை?