பாஜக அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக அவர்கள் செய்வார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  
 ‘தர்பார்’ படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, குடிநீர் பிரச்னை குறித்து பேசினார். 
 “தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை மனமார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். என்னுடைய ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விஷயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முன்பிருந்தே செய்துவருகிறோம். இப்போதுதான் அது வெளியே தெரிய தொடங்கி உள்ளது.


தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால், மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனே ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். பருவ மழை தொடங்குவதற்கு முன்பே எல்லாவற்றையும் சரிசெய்து மழைநீரை சேமிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்தப் பணிகளை செய்ய வேண்டும். மத்தியில் பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை அவர்கள் நிச்சயமாகச் செய்வார்கள்.” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.