உதயநிதி ஸ்டாலினை ‘மூன்றாம் கருணாநிதியே!’ என்று புகழ்ந்து போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறான் தி.மு.க. தொண்டன். ஆனால் அவரோ தொண்டனின் முகத்திலேயே நக்கல் பசையை தடவியிருக்கிறார்!....என்று வெடுக் விமர்சனம் ஒன்றை வைத்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள். ஏன் இந்த திடீர் கொந்தளிப்பு?விளக்குகிறார்கள் விமர்சகர்கள்...’கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளர் ஆனால் உதயநிதி. அதன் பின் தன் அணியை வைத்துக் கொண்டு தடபுடல்கள் செய்து கொண்டிருக்கிறார். திறமை இல்லாவிட்டாலும் கூட வாரிசு அரசியல் ரூட்டில் உச்சத்துக்கு வந்துவிட்டார் உதயநிதி! என்று உட்கட்சியில் துவங்கி, பொது ஜனம் வரை புகைச்சல் எழுந்தது. எனவே தன்னை நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார் உதயநிதி. இதற்காக அவர் கையில் எடுத்துள்ள அஸ்திரம்தான் ‘டார்கெட் ரஜினிகாந்த்’ என்பது. ரஜினியை மிக கடுமையாக விமர்சித்தால், தொடர்ந்து லைம்லைட்டிலும், செய்தி பரபரப்பிலும் இருக்கலாம் என்பது உண்மை. 


அதைத்தான் கேட்ச் பண்ணிய உதயநிதி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை தாறுமாறாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க. பேரணியை துவக்கிய சமயத்தில், அம்மசோதாவுக்கு ஆதரவாக பேசிய ரஜினியை ‘வயதானவர்’ என்று வெளுத்தெடுத்தார். அதேபோல் சமீபத்தில் ’முரசொலியை கையில் வைத்திருப்பவன் தி.மு.க.காரன். கையில் துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி!’ என்று போட்டுத் தாக்கிய ரஜினியை ’கால் நூற்றாண்டாக கால் பிடித்தே காலம் தள்ளிய, தலைசுற்றி நிற்கும் பெரியவர்’ என்று பதிலுக்குத் தாக்கித் தள்ளினார்.ஸ்டாலினை விட மிக வேகமாகவும், தாத்தா கலைஞரை போல் வார்த்தை விளையாட்டுடனும் உதயநிதி அரசியலில் புகுந்து விளையாடுவதை பார்த்து ஏக கொண்டாட்டமாகிவிட்டனர் தி.மு.க.வினர். உதயநிதி யாரை எதிர்க்கிறாரோ அவரை தங்களின் குடும்ப எதிரி போல் நினைத்துக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர். அந்த வகையில் ரஜினியை தங்களின் வாழ்நாள் எதிரியாக பாவித்து அவரை மிக கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். 

சோஷியல் மீடியாக்களில் ரஜினிக்கு எதிராக தி.மு.க.வினர் எடுத்து வைக்கும் விமர்சனங்களெல்லாம் தீ ரகங்கள்தான். தி.மு.க.தொண்டர்களிடம் ரஜினி எதிர்ப்புணர்வு எந்தளவுக்கு பதிந்துள்ளது என்றால் ’நம் இயக்கத்துக்கு எதிரான ரஜினியின் தர்பார் படத்தை பார்த்து, அந்தப் படத்தை வசூல் ரீதியில் வெற்றி பெற வைக்காதீர்கள்.’ என்று சபிக்குமளவுக்கு நிலைமை போயுள்ளது. தொண்டர்கள் இப்படி வெறித்தனமாக இருக்க, உதயநிதியோ அவர்களை லூஸாக நினைக்கிறார். அதனால்தான் அப்படியொரு முடிவை அறிவித்திருப்பார் கெத்தாக!அதாவது ஒரு ஆங்கில பத்திருக்கைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் உதயநிதி. அதில் “சன் பிக்சர்ஸ், ரஜினியை வைத்து கடைசியாக தயாரித்த ‘பேட்ட’ படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை உங்களது ரெட் ஜெயண்ட் மூவிஸ் செய்தது. இப்போது சன் பிக்சர்ஸ், ரஜினியை வைத்து ‘மன்னவன்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது உங்களுக்கும், ரஜினிக்கும் இடையில் அரசியல் வேறுபாடுகள் உள்ளது, இதனால் ரஜினியின் படத்தை நீங்கள் விநியோகிக்காமல் போகும் நிலை வருமா?’ என்று கேட்டதற்கு....”சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை தயாரித்தால் அதை நான் நிச்சயம் விநியோகிப்பேன். ரஜினி பட விஷயத்தைப் பொறுத்தவரையில் அந்த பிஸ்னஸை நான் செய்வதில் அவருக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையென்றால், எனக்கு என்ன பிரச்னை வரப்போகிறது!? ஒன்றும் இல்லை.” என்றுஇருக்கிறார். அதாவது ரஜினிகாந்தின் புதிய படத்தை விநியோகம் செய்ய ரெடியாக இருக்கிறேன்! என்கிறார் உதயநிதி. 

உதயநிதியின் உணர்வை மதித்து, ரஜினியின் படத்தை பார்ப்பதே பாவம்! என நினைக்கிறான் தி.மு.க. தொண்டன். ஆனால் உதயநிதியோ ரஜினியின் படத்தை பல கோடிகள் கொடுத்து வாங்கி, அதை விட பல கோடிகள் லாபம் வைத்து விற்று சம்பாதிக்க தயாராக இருக்கிறார். அரசியலுக்காக நான் என்னவேணா சொல்வேன் ரஜினியை. அதை நீ நம்பணும்! ஆனால் பிஸ்னஸுன்னு வர்றப்ப, நானும் ரஜினியும் சேர்ந்துப்போம். எங்களுக்கு அரசியல் வெற்றியும் முக்கியம், பிஸ்னஸ் லாபமும் முக்கியம். ஆனா நீ மட்டும் போஸ்டர் ஒட்டிட்டே இரு! என்பதுதானே உதயநிதியின் முடிவு. ஆக அவர் தி.மு.க. தொண்டர்களை லூஸாக நினைக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.” என்கிறார்கள். 
என்னத்த சொல்ல?