கந்த சஷ்டி கவசம் பற்றி கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோவுக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் வீடியோ வெளியிட்டவர், யூடியூப் சேனலின் நிர்வாகி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் கருப்பர் கூட்டம் சேனலை தடை செய்யவும் போலீஸார் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் கருப்பர் கூட்ட விவகாரத்தில் திமுகவையும் இழுத்துவிட்டு விமர்சித்துவரும் பாஜக, தங்களுக்கு ஆதரவாக நடிகர் ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது.


இந்த விருப்பத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனே வெளிப்படுத்தினார். எல்.முருகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் வெற்றி அதிமுகவிடம் இருந்து மாற்றுப் பாதைக்கு, அதாவது ரஜினியிடம் சென்றுவிடும் என்ற கருத்தை பாஜக கூறுவது, அதிமுகவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எல்.முருகன், “நிச்சயமாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது போன்ற சூழல் ஏற்படும். அந்தச் சூழலை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க வேண்டும். இதற்குப் பின்புலமாக இருப்பவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். இந்துக்கள் மனம் புண்படும்படி நடந்துக் கொண்ட அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்த எல்.முருகன், “நடிகர் ரஜினிகாந்த் கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் குரல் கொடுக்கவேண்டும்” என்றும் தெரிவித்தார். 
இந்நிலையில் கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினி இன்று குரல் கொடுத்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த, அந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே.!! கந்தனுக்கு அரோகரா.!! என பதிவிட்டுள்ளார்.
பாஜக  தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்ட அடுத்த நாளே ரஜினி குரல் கொடுத்திருப்பது பாஜகவினரை திக்குமுக்காட வைத்துள்ளது. இந்தப் பதிவை கொண்டாடிவரும் பாஜகவினரும் ரஜினி ரசிகர்களும், கந்தனுக்கு அரோகரா என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டிங் செய்துவருகிறார்கள்.