திருவள்ளுவருக்கு காவி பூசியது போல என் மீது காவி சாயம் பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என ரஜினி கூறியுள்ளது பாஜகவை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால், பாஜக குறித்து ரஜினியின் விமர்சனத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கை தட்டி வாய்பொத்தி ரசித்து வருகிறது. 

கட்சி ஆரம்பிக்கப்போவதாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அறிவித்த போதே 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் ரஜினிகாந்த் தெளிவாக உள்ளார். அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கி நிர்வாகிகளையும், மன்றத்தையும் கட்டமைத்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் பாஜக கட்சியில் சேரப்போகிறார் என்றும், கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்றும் பேச்சுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அதேபோல் பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசிவந்தார். 

இதனிடையே ரஜினி பாஜகவுக்கு வரவேண்டும் என அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வந்தனர். மேலும் சாயம் பூசும் வகையில் பாஜக ரஜினிக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், சில நாட்களுக்கு முன்னர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் எனக் கொடுத்து வந்தது. 

இது ஒருபுறம் இருக்க, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே, திமுக அவர் மீது மதவாதி என்கிற சாயத்தை பூசி வந்தது. ரஜினியை பாஜக ஆதரவாளராக சித்தரித்து வந்தது.

இந்நிலையில், இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம்பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது. தம்மை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது அது நடக்காது. திருவள்ளுவருக்கு காவி அணி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம். திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்று அதிரடியாக கூறினார். 

இதற்கு பாஜக தரப்பில் வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதரராவ் உள்ளிட்டோர் ரஜினியை பாஜகவுக்கு வருமாறு யாரும் அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், பாஜகவுக்கும், ரஜினிக்கும் இருந்த உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்படியோ ரஜினிக்கு பாஜக இடையே கலபரம் உண்டாகி உள்ளதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கை தட்டி வாய்பொத்தி ரசித்து வருகிறார்.