என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ரஜினி பேசிக் கொண்டிருப்பதாக அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரனிடம் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக காரணம் கலைஞர் தான் என்று ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த டி.டி.வி., சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க ஆட்சி அமைக்க காரணமாகவே இருந்ததே எம்.ஜி.ஆரின் பாப்புலாரிட்டி தான் என்றார். அந்த வகையில் பார்த்தால் அண்ணா முதலமைச்சரானதற்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணம்.

மேலும் 1969ல் கலைஞர் முதலமைச்சரானதற்கும் காரணம் எம்.ஜி.ஆர் தான். இது அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க உருவாக காரணம் கலைஞர் தான் என்று ரஜினி கூறுகிறார். ஆமாம், கலைஞர் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தியதால் அ.தி.மு.க உருவானது. இது ரஜினிக்கு தெரியும் என்று நம்புகிறேன். மேலும் மெரினாவில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கவில்லை என்றால் நேரடியாக தானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் என்று ரஜினி கூறுகிறார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று ரஜினியே கூறியுள்ளார். கலைஞர் நினைவிடத்திற்காக ரஜினி போராடலாம், ஆனால் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடக்கூடாதா? ரஜினி தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறார். எனவே அவர் பேசியதை அன்றும் இன்றும் என போட்டு அவருக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்று தினகரன் கூறிவிட்டு சென்றார்.