நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ரஜினியின ஆதரவை எதிர்பார்த்தார் கமல்ஹாசன். அவரது வாய்ஸை வாய்விட்டு வெளிப்படையாகவே கேட்டும்விட்டார். ஆனால் ரஜினியோ நதிநீர் இணைப்பு விஷயத்தைக் கையிலெடுத்து பி.ஜே.பி.க்கு மறைமுக ஆதரவு தெரிவித்தது போல் ஒரு  அலையை உருவாக்கிவிட்டார். 

வெளிப்படையாக கேட்டும் கூட, பி.ஜே.பி.க்கு இப்படி தோள் கொடுத்து தன்னை ரஜினி அசிங்கப்படுத்திவிட்டார்! என்று ஏக கடுப்பில் இருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், முடிந்திருக்கும் தேர்தலில் கமல்ஹாசனின் டார்ச்லைட் சின்னத்துக்கு கணிசமான வாக்குகள் விழுந்திருப்பதாக சில சர்வேக்கள் தெரிவிக்கின்றன. இது ரஜினியின் காதுகளுக்கும் போக, அதை அவர் கிராஸ் செக் செய்திட, ‘ஆம்’ என்று பதில் வந்தது. 

இந்நிலையில், ஓட்டு போட்டுவிட்டு மீண்டும் மும்பைக்கு ‘தர்பார்’ பட ஷூட்டிங்குக்காக சென்ற ரஜினி, மும்பையிலிருந்து இரண்டு மூன்று முறை கமல்ஹாசனிடம் பேசிவிட்டாராம். ‘வாய்ஸ் தரலைன்னு கோபப்படாதீங்க, சங்கடப்படாதீங்க.’ என்று ஆறுதல் சொல்லி வருத்தம் தெரிவித்தவர். 

இன்னும் சில மாதங்களில் தான் கட்சி துவங்கி, அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பது பற்றி வெளிப்படையாக சில தகவல்களை தெரிவித்ததோடு ‘அடுத்த தேர்தல்ல நாம கைகோர்த்து நின்னாலும் ஆச்சரியமில்லை.’ என்று கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். 

ரஜினியிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்? என்று கவனித்த கமலுக்கு, இளைஞர்கள், நடுத்தர பெண்கள் மற்றும் நடுநிலை வாக்கு வங்கியில் முக்கிய சதவீதம் ஆகியவை தன்னை ஆதரித்திருப்பதாக கிடைத்த சர்வே ரிப்போர்ட்டே காரணம்! என்பது புலனாகிட. மர்மமாக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார். 

ரஜினி கூட்டிக் கழிச்சு கணக்கு போட்டால் அதில் ஒரு ஆதாயம் இல்லாம இருக்காதேங்கிறதுதான் கமலின் கணக்கு.