புதியவரைக் கொண்டாட தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அந்தப் புதியவர் நிச்சயம் ரஜினிதான் என்று ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.
ரஜினி கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடுவேன் என்று பேசி 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. ரஜினி எதைப் பற்றி பேசினாலும் தமிழக அரசியல் அரங்கில் சலசலப்பு ஆகிவிடுகிறது. இதற்கிடையே அவர் எப்போது கட்சித் தொடங்குவார் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்துள்ளது. “வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சித் தொடங்குவார், ஆகஸ்டில் மாநாடு நடத்துவார், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வார் என அண்மையில் தமிழருவி மணியன் கூறியதாக செய்திகள் வெளியாயின.


இந்நிலையில் ரஜினி மூன்று அல்லது நான்கு மாதங்களில் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று அவருடைய சகோதரர் சத்ய நாராயணராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சத்ய நாராயண ராவ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எனக்கு மட்டுமல்ல, அவருகே அந்த ஆசை நிறைய இருக்கு. மக்கள் பிரச்னை நிறைய இருக்கு. அதையெல்லாம் தீர்க்கணும், அரசியலுக்கு வரணும்னு சின்ன வயசுலேர்ந்தே ஓயாம சொல்லிக்கொண்டிருப்பவர் ரஜினி” என்று சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.


மேலும் ரஜினி ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்விக்கும் சத்ய நாராயணராவ் பதில் அளித்துள்ளார். “உறுதியா நம்புறேன். இப்பவே மக்கள் மனநிலை மாறிப் போயிருக்கு. இப்ப ஆட்சியில் இருக்குறவங்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருக்காங்க. நல்லவர் புதுசா வரணும், கொண்டாடணும்னு மக்கள் முடிவு செஞ்சுட்டாங்க. அந்தப் புதியவர் ரஜினிதான். தமிழ் மக்களோட உள்ளத்தில் எல்லாம் ரஜினி நிறைஞ்சிருக்கார். அதை வெளிப்படுத்த சமயம் வரணும். தமிழ் நாட்டு மக்கள் சொல்ல மாட்டாங்க, செய்வாங்க” என்று சத்ய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.