குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்த்தது போல, தமது உதவியாளர் சத்திய நாராயணா மூலம், ரசிகர்களின்  கருத்துக்களை கேட்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இதற்காக, தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், நேற்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வரவழைக்கப் பட்டிருந்தனர்.

அவர்களின் கருத்தை ரஜினி கேட்கவும் இல்லை. மண்டபத்திற்கு வரவும் இல்லை. ஆனால் அவ்வப்போது செல்போன் மூலம், சத்திய நாராயணனிடம் கேட்டு தேர்ந்து கொண்டார்.

ஆனால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடிப் போனார் சத்தியநாராயணன்.

தலைவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா ? தாமரைக் கட்சியில் சேரப் போகிறாரா ? இல்லையென்றால் வழக்கமான சந்திப்புதானா ? என்று கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்து விட்டனர் ரசிகர்கள்.

அதற்கு, வரும் 12,17 ஆகிய தேதிகளில் தலைவர் உங்களை சந்திக்கும் போது இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார் என நழுவியிருக்கிறார் சத்தியநாராயணா.

இதற்கிடையில் தனது அரசியல் பிரவேசம்  குறித்து வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் தனது நண்பர்களை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினி. 

இப்போது இருக்கும் அரசியல் சூழலில் தனிக்கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? இல்லை பா.ஜ.க.வுடன் சென்றால் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்க முடியுமா? என்று அவர்களிடம் கேட்டிருக்கிறார்.

இதை எல்லாம் பார்க்கும் போது, ரஜினி அரசியலில் குதிப்பது உறுதி. ஆனால், பாஜக வில் சேரப்போகிறாரா? அல்லது தனி கட்சியா? என்பதுதான் குழப்பம் என்கின்றனர் ரசிகர்கள்.