பிரபல குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்புவுக்கும் திருவண்ணாமலை தொகுதியின் எம்எல்ஏ பிச்சாண்டியின் மகளுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் திருப்பதில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால் இது காதல் திருமணம் என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் மயில்சாமி மகன் – பிச்சாண்டி மகள் திருமண வரவேற்பு நடைபெற்றது. பிரபல நடிகர் மற்றும் எம்எல்ஏ மகள் திருமணம் என்பதால் தடல் புடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான திமுகவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் திருமண வரவேற்பில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் சத்தியராஜ், பாடல் ஆசிரியர் வைரமுத்து, இயக்குனர் ஷங்கர் என திரையுலகின் பெரும்புள்ளிகள் வரவேற்பில் பங்கேற்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரஜினியின் கார் திருமண மண்டபத்திற்குள் வந்தது. இதனை பார்த்து திமுகவினர் பலரும் பதற்றம் அடைந்தனர். நம்ம எம்எல்ஏ வீட்டு திருமணத்திற்காக சூப்பர் ஸ்டார் வந்துள்ளார்? என்று அவர்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்.

ரஜினி வந்த தகவல் அறிந்து மேடையில் இருந்து மயில்சாமி இறங்கி ஓடி வரவேற்று அழைத்துச் சென்றார். ரஜினி மேடை ஏற முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதியது. பலரும் ரஜினியை நெருங்கியதால் மேடையில் தள்ளுமுள்ளே ஏற்பட்டது. அப்போது திமுக எம்எல்ஏ பிச்சாண்டியும் வந்து ரஜினிக்கு கை கொடுத்து மேடையில் மணமக்கள் அருகே அழைத்தச் சென்றார். திமுக எம்எல்ஏ ஒருவர் வீட்டு திருமணத்தில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட இந்த தடல்புடல் வரவேற்பு உண்மையில் பேசு பொருள் ஆனது.

ஆனால் ரஜினியோ மயில்சாமியின் அழைப்பின் பேரில் இந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக ரஜினியுடன் சினிமா மற்றும் நட்பு ரீதியாக மயில்சாமி தொடர்பில் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.