நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்ததையடுத்து, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவாரா மாட்டாரா என்ற தீவிர குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.  

போன வாரம் வரை பாஜகவையும் பிரதமர் மோடியையும் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த நடிகை குஷ்பு, இன்று பாஜகவிலேயே ஐக்கியமாகிவிட்டார். தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் நடிகை குஷ்பு பாஜகவுக்கு சென்றிருப்பது பாஜகவினருக்கு குஷியையும் காங்கிரஸாருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்த தவறவில்லை. சமூக ஊடகங்களிலும் குஷ்புவின் அரசியல் மாற்றம் இரண்டு நாட்கள் விவாதப் பொருளாக மாறியிருந்தது. ‘தமிழகத்தில் ஒவ்வொரு தெருவிலும் தாமரையை மலரப் பாடுபடுவேன்’ என்று சொல்லி குஷ்பு கட்சிப் பணியைத் தொடங்க உள்ளார்.


குஷ்பு மாற்று முகாமுக்கு சென்றதால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ரஜினி ரசிகர்களும் குஷ்பு பாஜகவில் சேர்ந்ததை ரசிக்க முடியாமல் தவித்துவருவதை அறிய முடிகிறது. அதற்குக் காரணம் இதுதான். கடந்த 2017-ம் ஆண்டு அரசியலில் குதிக்கப் போவதாக ரஜினி அறிவித்து 3 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையிலும், ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவாரா மாட்டாரா என்று உச்சகட்ட குழப்பத்தில் அவருடைய ரசிகர்கள் உள்ளனர்.


ஆனால், இன்று திடுதிப்பென குஷ்பு பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம், குஷ்பு ஏன் இந்த முடிவை எடுத்தார் என்ற குழப்பத்தில் உள்ளார்கள். பாஜகவில் சேரும் முன்பு எப்படியும் தலைவர் ரஜினியுடன் குஷ்பு பேசியிருப்பார். அவரும் பச்சைக்கொடி காட்டிய பிறகே பாஜகவுக்கு சென்றிருப்பார் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். அப்படியானால், தேர்தலுக்கு முன்பு ரஜினி கட்சி தொடங்கமட்டார் என்பதை நடிகை குஷ்பு உணர்ந்ததால்தான் பாஜகவுக்கு சென்றிருப்பார் என்று ஒரு சீனியர் ரஜினி ரசிகர் தெரிவித்தார். ரஜினி கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட குஷ்பு, பாஜகவுக்கு சென்றதை சகிக்க முடியாமமேலேயே கதி கலங்க பார்க்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்?!