ரசிகர்களுக்கு ரஜினி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக  சமூக ஊடகங்களில் உலா வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே, அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்று அவருடைய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்தனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ரஜினி, ‘ரசிகர்களை நான் ஏமாற்றமாட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிறகு குஷியான அவருடைய ரசிகர்கள், ஏற்கனவே செய்துவந்த மன்ற உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகள் அமைப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதனை வெளிப்படுத்தும்விதமாக வேலூர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கையே வெளியிட்டனர்.  அதில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என ரஜினி கூறியுள்ளார். அதற்கேற்ப மாவட்டம் முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டு, அரசியல் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரஜினி நிகழ்த்த உள்ள அரசியல் மாற்றத்துக்கும், சட்டப்பேரவை தேர்தலுக்கும் ஏற்றவாறு துணை நின்று ரஜினியின் வெற்றியை உறுதியாக்குவோம்” என்று தெரிவித்திருந்தனர்.

 
இந்த அறிக்கை சமூக ஊடங்களில் வேகமாகப் பரவியது. வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்களுக்காக வெளியிடப்பட்ட மன்ற நிர்வாகிகளின் அறிக்கை, சமூக ஊடங்களில் ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு என்று ரசிகர்கள் மத்தியில் பரவியது. ‘ரஜினியே சொல்லிவிட்டார்.. வேகமாகப் பணியாற்றுங்கள்’ என்று ரஜினி ரசிகர்கள் வேலூர் மாவட்ட ரசிகர்களின் அறிக்கையைப் பரப்பினர். இதனால், அனைத்து மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும் பரபரப்படைந்தனர்.


இந்நிலையில் மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினி பிறப்பித்த உத்தரவு தொடர்பான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு.. வாய்மொழி உத்தரவு எனப் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் ரஜினி தொடர்பாக அவருடைய ரசிகர்கள் பரப்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.