பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்த இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மையினர் அகதிகள் மத துன்புறுத்தலால் 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை சட்டம் மதபாகுபாடு காட்டுவதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

 

இந்த போராட்டங்கள் குறித்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஜினி, "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" எனத் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் திமுக வரும் 23ம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப்போராட்டத்தை மையப்படுத்தி ரஜினி கருத்துத் தெரிவித்ததாக கருதுகின்றனர் திமுகவினர். ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தலைவர் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்’’என ரஜினியை விமர்சித்து இருந்தார்.

 


உதயநிதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனை வெளிப்படுத்தும் விதமாக #IStandWithRajinikanth என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது. அதேவேளை ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து #ShameOnYouSanghiRajini என்கிற ஹேச்டேக்கும் ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது. 

 

இந்நிலையில் வரும் 23ம் தேதி திமுக போராட்டம் நடத்த இருப்பதால் பிரியாணி பத்திரம் எனவும் திமுகவை கலாய்த்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.