புதிய கட்சித் தொடங்குவது தொடர்பாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ரஜினி சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி போட்டியிட தயாராகிவருகிறார். வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சித் தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்துவார் என்றும் செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ‘அண்ணாத்தே’ படத்தில் பிஸியாக இருக்கும் ரஜினி, கட்சித் தொடங்கும் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறார். சிஏஏ-க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த ரஜினியை, இஸ்லாமியர்கள் கடந்த சில நாட்களாக சந்தித்தனர்.

 
இந்நிலையில் கட்சி தொடங்கும் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களைச் சந்திக்க ரஜினி முடிவு செய்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை மறுதினம் மாவட்ட செயலாளர்களைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது பூத் கமிட்டிகள் அமைப்பது, மக்கள் மன்ற உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிப்பதோடு, புதிய கட்சி தொடங்குவது குறித்தும் ரஜினி ஆலோசிப்பார் என்று மன்றத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தமிழ்ப் புத்தாண்டில் ரஜினி கட்சித் தொடங்குவார் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.