அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ள ரஜினிகாந்த், அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார். ரஜினியை பாஜக பின்னிருந்து இயக்குகிறது என்ற விமர்சனத்தை சீமான் உள்ளிட்ட பலர் முன்வைத்துவருகின்றனர்.

ஆன்மீக அரசியல் செய்வேன் என ரஜினி சொன்னதும், ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த பலரும் கண்டிப்பாக பாஜகதான் இயக்குகிறது என உறுதியாக தெரிவித்தனர். ஆனால், நேர்மையான, உண்மையான அரசியலைத்தான் ஆன்மீக அரசியல் என குறிப்பிட்டதாக ரஜினி விளக்கமளித்தும் அதை ஏற்றுக்கொள்ள பலர் தயாராக இல்லை. ரஜினியின் சமாளிப்பாகவே அவரது விளக்கம் பார்க்கப்படுகிறது.

அரசியலில் ஆன்மீகத்தை ஏன் இணைக்கிறார்? இரண்டும் வேறு வேறு என்ற கருத்தையும் பல அரசியல் கட்சியினர் முன்வைத்தனர்.

அரசியலுடன் ஆன்மீகத்தை இணைத்து பேசிய ரஜினிகாந்த், ஆன்மீக பயணத்தில் அரசியல் குறித்து பேசமாட்டேன் என கருத்து தெரிவித்திருப்பது முரணாக பார்க்கப்படுகிறது. இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், அதற்கு முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, உஷாவின் மரணம், சென்னையில் மாணவி கொலை ஆகியவை தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்தார்.

அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இது புனிதமான இடம். ஆன்மீக பயணத்தில் இருப்பதால், இந்த பயணம் முடியும்வரை அரசியல் பேசமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஆன்மீக பயணத்தில் இருக்கும்போது அரசியல் பேச மறுக்கும் ரஜினி, அரசியலில் ஏன் ஆன்மீகத்தை கலக்கிறார் என விமர்சனங்கள் வலுத்துள்ளன. ரஜினியின் இந்த முரணான செயல்பாடுகள் சந்தர்ப்பவாத செயல்பாடு என்ற விமர்சனமும் கடுமையாக முன்வைக்கப்படுகிறது.