பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார். பா.ஜ.க சார்பில் மாநிலம் முழுவதும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு நம்ம ஊரு பொங்கல் நடைபெற்றது.

பா.ஜ.க., மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி கலந்துகொண்டு பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’தமிழகத்தில் பா.ஜ.க கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கூட்டணி என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தற்போது கருத்துக்கள் இல்லை.

யார் முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க.,வுக்கு கிடையாது. தேர்தல் வரை எதையும் உறுதியாக சொல்லமுடியாது. பா.ஜ.க.வை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாக அமையவும், பொதுமக்களை சந்திக்கவும் நான் வந்துள்ளேன்’’ என அவர் தெரிவித்தார்.