அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் மற்றும்  பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. முதலமைச்சராக குமாரசாமி உள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போடியிட உள்ளன.
இந்நிலையில், பிரபல கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான, அம்பரீஷ், அண்மையில் மரணம் அடைந்தார்.

இதனிடையே அம்பரீஷின் மனைவியும், முன்னாள் நடிகையுமான, சுமலதா, 55, வரும் மக்களவைத்  தேர்தலில், மாண்டியா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட தயாராகி வருகிறார். 

இவர், தமிழில், முரட்டுக்காளை என்ற படத்தில், ரஜினியுடன் நடித்தவர். மேலும் திசை மாறிய பறவைகள் போன்ற தமிழ் படங்களிலும் நடத்துள்ளார். கன்னடத்தில் உள்ள பிரபலமான நடிகர்கள் அனைவரும், சுமலதாவுக்கு ஆதரவாக, பிரசார களத்தில் குதிக்க தயாராக உள்ளனர். 


இந்நிலையில் அம்பரீஷுக்கு நெருங்கிய நண்பரான  நடிகர் ரஜினிகாந்த், நடிகை .சுமலதா போட்டியிட்டால், ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்ய, தயாராக இருப்பதாக, கன்னட சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அம்பரீஷின் நண்பரும், லிங்கா பட தயாரிப்பாளருமான, ராக்லைன் வெங்கடேஷ், தன் நெருங்கிய நண்பர்களிடம், இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனாலும், சுமலதாவுக்கு, 'சீட்' கொடுக்க, காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டி வருகிறது. காங்கிரசில் வாய்ப்பு அளிக்காவிட்டால், சுயேச்சையாக போட்டியிட அவர், தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.