தமிழக பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிதான் சமீப காலமாக டிரெண்டிங்கில் இருக்கிறார். தன் கட்சியை காப்பாற்றும் நோக்கில் எதிர்கட்சிகளை வீரியமான வார்த்தைகளில் அவர் பொளந்து கட்டும் விவகாரங்கள் தென்னிந்திய அளவில் மட்டுமல்ல டெல்லி வரை கில்லி வைரலாகி இருக்கின்றன.

இந்த நிலையில் அவரது பேச்சுக்கள், வீடியோக்கள், போட்டோக்கள், அவரது தினசரி நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றி பப்ளிகுட்டி பண்ணிட அவரது ஆதரவாளர்களால் ‘கே.டி.ஆர். ஆர்மி’ எனும் பெயரில் இணைதளத்தில் பக்கங்கள் இயங்குவது பற்றி! நாம் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். இந்த நிலையில், ராஜேந்திரபாலாஜிக்கு செம்ம சவால் விடும் வகையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக வென்ற ஒரே எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமாரின் புகழ் பாடிடவும் ஒரு ஆர்மி இயங்கி வருகிறது. ’ஓ.பி.ஆர். ஆர்மி’ எனும் பெயரில் இயங்கி வரும் இந்த பக்கமும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் பேசும் விஷயங்கள், தேனி தொகுதியில் அவர் செய்யும் நடவடிக்கைகள், அவர் கலந்து கொள்ளும் பர்ஷனல் மற்றும் அரசு விழாக்களின் கவரேஜ் என்று போட்டு வெளுக்கிறது இந்த இணையதள பக்கம். இதன் அட்மினாக இருப்பவர் ராஜ்மோகன் என்பவர். “அண்ணன் ஓ.பி.ஆர்.ரோட செயல்பாடுகளை உடனுக்குடன் இந்த பக்கத்தில் பதிவேற்றுகிறோம். எம்புட்டு நெகடீவ் கமெண்ட்ஸ் வந்தாலும் நாங்க கண்டுக்கிறதில்லை. எங்க பணியை செய்து ஓ.பி.ஆர். புகழை பரப்புகிறோம். எங்களின் ஆர்மியை குறுகிய காலத்துல குறைஞ்சது இருபத்தைந்தாயிரம் பேர் பின் தொடர்கிறாங்க. இதனால எங்க டீம் ஏக சந்தோஷத்தில் இருக்குது. 
அண்ணன் ஓ.பி.ஆரும் செம்ம ஹேப்பிதான்.” என்கிறார். 

இந்த ஆர்மி நடவடிக்கைகள் தங்கள், தங்கள் புகழைப் பாடிக்கொண்டிருந்துவிட்டால் தொல்லை இல்லை. ஆனால், ராஜேந்திரபாலாஜியை விட ஓ.ரவீந்தரநாத் அதிக லைக்ஸ் வாங்கணும், அதிக பார்வையாளர்கள் வரணும்! என்று இந்த டீம் ஆசைப்படுவதும்! ரவியை விட ராஜேந்திரபாலாஜிக்கு அதிக பாஸிடீவ் கமெண்ட்ஸ் வரணும்! என்று அந்த டீம் நினைப்பதும்தான் இவர்களிடையே போட்டி, பொறாமையை உருவாக்கியுள்ளது. இதற்காக ஒரு டீமின் ஆட்கள்  இன்னொரு டீமின் சமுக்க வலைதள பக்கங்களுக்குள் நுழைந்து எதிர்மறை விமர்சனங்களை வைப்பது, திட்டுவது, கிண்டலடிப்பது என வம்புக்கிழுக்கும் பஞ்சாயத்துகளும் நடக்கிறதாம். 

ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிக்கல்களோடதான் அ.தி.மு.க. வண்டி ஓடிட்டு இருக்குது. இதுல இவங்களோட சண்டை வேற! கூடிய சீக்கிரம்  நடுத்தெருவுல நின்னு சண்டை போட்டாலும் ஆச்சரியமில்லை! மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைப் பண்ணச் சொன்னால் என்ன பண்ணிட்டிருக்காங்கன்னு பாருங்க! என விமர்சகர்கள் கழுவி ஊற்றுகிறார்கள். 

வெளங்கிடும்!