முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. பல அதிரடியான கருத்துக்களை அவ்வப்போது கூறி அரசியல் அரங்கில் பல அதிர்வுகளை ஏற்படுத்துபவர். திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கிடைக்கிற இடங்களில் எல்லாம் கடுமையாக விமர்சிப்பார். பலமுறை சர்ச்சையான கருத்துகளைக்கூறி அதற்காக கண்டனங்களையும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் ஸ்டாலினுக்கு அழகிரி என்கிற பெயரே ஆகாது என்று தற்போது தனது ட்விட்டரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிவிட்டுள்ளார். அதில், "அட சும்மா இருங்கப்பா.. #ஸ்டாலின் அண்ணாச்சிக்கி  #அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகாதப்பா.... அது மதுரை என்றாலும் சரி  கடலூர் என்றாலும் சரி"... என்று கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியையும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதனால் கோபமடைந்த திமுக தலைமை, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்தது. 

இதையடுத்து இருகட்சிகளிலும் இரண்டாம்கட்ட தலைவர்கள் கூட்டணிக்கு எதிராக மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசிய பிறகு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் ஏற்கனவே மோதல் போக்கில் இருக்கும் ஸ்டாலினையும் மு.க.அழகிரியையும் இணைத்து நக்கலாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.