கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தில் நடந்த பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ரூ.1.76 ஆயிரம் கோடி ஊழல் செய்த கட்சி திமுக என்று கடுமையாக விமர்சித்திருந்தார். தன்னுடன் தொடர்புடைய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி முதல்வர் பேசியதால் ஆத்திரமடைந்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அதிமுகவையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்ததுடன், ஜெயலலிதாவை ஆத்தா என்றெல்லாம் கொஞ்சம் அத்துமீறி பேசி, அதற்கான வசைகளையும் அதிமுகவினரிடமிருந்து வாங்கிக்கட்டி கொண்டார்.

முதல்வருக்கு பதிலடி கொடுத்து பேசும்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு குறித்து என்னுடன் விவாதிக்க முதல்வர் தயாரா என்று கேள்வியெழுப்பிய ஆ.ராசா, இரு தினங்களுக்கு பிறகு, விவாதத்திற்குத் தான் விடுத்த அழைப்பிற்கு முதல்வர் பதிலளிக்கவில்லையே என்று நக்கலாக பேசினார். ஆ.ராசாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ”ஆ.ராசாவுடன் விவாதம் நடத்துவதற்கெல்லாம் முதல்வர் வரமுடியாது. நான் வேண்டுமானால் விவாதம் செய்ய தயார்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கவே, தகுதியில்லாத நபருடன் விவாதம் செய்ய தான் தயாராக இல்லை என்று ஆ.ராசா கடுமையான முறையில் பதிலடி கொடுத்தார். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜோக்கர் என்றும் விமர்சித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆ.ராசாவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நானும் தகுதியில்லாத ஆ.ராசாவுடன் விவாதம் நடத்த தயாராக இல்லை. நான் காரில் போவது குறித்து பேசும் ஆ.ராசா சைக்கிளில் போகக்கூட வழியில்லாமல் இருந்தவர்; ஆனால் இன்று வெளிநாட்டு காரில் செல்கிறார். இதென்ன அவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கியதா? 

என்னை ஜோக்கர் என்கிறார். ஜோக்கர் யார் என்பது தேர்தலில் தெரியும். பிறரை அவமானப்படுத்தி பேசுவது ஆ.ராசாவிற்கு மட்டுமல்ல; திமுக தலைவர்களுக்கே கைவந்த கலை. திமுக ஒரு தறுதலை கட்சி; அதிமுக ஆன்மீக கட்சி. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யமாட்டார்கள். மற்றவர்களை துன்புறுத்தி நாங்கள் இன்புறமாட்டோம்.

எங்களிடம் நியாயம் இருக்கிறது. அவர்களிடம் அநியாயம் தான் இருக்கிறது. நாங்கள் உண்மையை உரக்க சொல்கிறோம். என்னுடன் விவாதிக்க ஆ.ராசா தயாரில்லை என்றால், ஆ.ராசா மீது தவறிருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை தானே அவரை சிறையில் அடைத்தது? அவருக்கு பெயரே ஸ்பெக்ட்ரம் ராசா தான். ஆனால் உத்தமர் வேடம் போடுகிறார் என்று ஆ.ராசாவையும் திமுகவையும் கிழித்தெடுத்தார் ராஜேந்திர பாலாஜி.