’அண்ணன் தம்பி மாமன் மச்சான்களாகப் பழகி வரும் இந்து முஸ்லீம்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டு குளிர் காயும் கமல் மீது மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தேவேண்டும்’என்று கமலை விடாது துரத்துகிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற கமலின் பேச்சு தீப்பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் சற்றுமுன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அனல் பறக்கும் பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய அவர், ‘என்னை பதவி நீக்கம் செய்ய கூறுவதற்கு கமலுக்கு என்ன உரிமை உள்ளது.நாக்கை அறுப்பேன் என்றால் உடனே அறுத்துவிடுவோமா?.ஜெயலலிதா இருந்த போது நாட்டை விட்டு ஒடுவேன் என்றவர் கமல்.

நாடு சுதந்திரம் அடைந்த போது இந்துக்களும் இஸ்லாமியர்களும் சிந்திய ரத்தத்தை கமல் மறக்கலாமா? அதைக் கடந்து வந்து இப்போது மக்கள் சகோதர மனப்பான்மையுடன் பழகிவரும் வேளையில் பயங்கர வாதத்தைத் தூண்டும் இந்தப்பேச்சு அவர் ஐ.எஸ். தீவிரவாதைகளிடம் காசு வாங்கிக்கொண்டு கைக்கூலியாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை மத்திய உளவுத்துறையினர் கண்டுபிடிக்கவேண்டும்.

நான் கமல் நாக்கை அறுப்பதாகப் பேசியது மக்கள் எண்ணத்தை பிரதிபலித்துதான். அதனால் தன் செயலுக்கு வருந்தி கமல் மன்னிப்புக் கேட்டால்தான் என் வார்த்தைகளைத் திரும்பப்பெறுவது குறித்தே யோசிப்பேன்’ என்றார் ராஜேந்திர பாலாஜி.