சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் பொம்மி. அதே பகுதி முன்னாள் அதிமுக கவுன்சிலர். தற்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் செயல்பட்டு வருகிறார்.

தற்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும், பிரமுகர்களும் சூறாவளியாக சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தோட்டம் பகுதியில் மயிலாப்பூர் பெண் கவுன்சிலர் பொம்மி உள்பட ஏராளமானோர், ஓ.பி.எஸ். ஆதரவாளர் மதுசூதுனனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்தனர்.

மாலையில் கொருக்குப்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் நடந்தது. அதில், கலந்து கொள்வதற்காக முன்னாள் கவுன்சிலர் பொம்மி, உமையாள், பூங்கொடி ஆகியோர் காரில் புறப்பட்டனர்.

ஏஇ கோயில் அருகே சென்றபோது, எதிரே சசிகலா ஆதரவாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ராஜேந்திரபாலாஜி, கவுன்சிலர் பொம்மி உள்பட காரில் இருந்த 3 பெண்களை, ரோட்டில் இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அமைச்சருடன் வந்த ஆதரவாளர்களும், ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரமா செய்கின்றனர் என கூறி, 3 பெண்களையும் தாக்கியுள்ளனர். பின்னர், பொம்மிக்கு கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பொம்மி, புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், நாங்கள் ஓ.பி.எஸ்.ஸின் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிரே வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தார்கள்.

காரில் இருந்த எங்களை கீழே இழுத்து ரோட்டில் தள்ளி சரமாரியாக தாக்கினர். சேலையை கிழித்து மானபங்கம் செய்தனர். பின்னர், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஏற்கனவே அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த நேரத்தில் அவரது ஆதரவாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தன்னை தாக்கியதாக முன்னாள் பெண் கவுன்சிலர் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.