கடந்த சில வாரங்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்களை ஒரு புரட்டு புரட்டினால்...அவர் தினகரன் வகையறாவை போட்டுக் கிழி கிழியென கிழித்திருப்பதும், முதல்வர் எடப்பாடியாரை வானுயர புகழ்ந்திருப்பதும் புரியும். சரி, எடப்பாடியார் அமைச்சரவையில் உள்ளவர் அவரை புகழ்வதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்கிறீர்களா....
விஷயமே வேறு!

அதாவது எடப்பாடியாரை புகழ்வது போல் புகழ்ந்து பெரும் சிக்கல்களிலும், விமர்சனங்களிலும், காமெடிகளிலும் வலிய இவர் தள்ளிவிடுகிறாரோ? என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன. எப்படி? என்று அ.தி.மு.க.வினரிடமே கேட்டபோது “புரட்சித்தலைவி ஜெயலலிதாவை ‘அம்மா’ என்றே அழைத்து பழக்கப்பட்டது எங்கள் கழகம். இந்நிலையில் மோடி எங்கள் டாடி! என்று சொல்லி கழகத்தை கிட்டத்தட்ட அச்சிங்க நிலையில் கொண்டு போய் வைத்தார் ராஜேந்திர பாலாஜி. 

இச்சூழலில், ‘முதல்வர் எடப்பாடியார் நடந்தால் ஊர்வலம், அமர்ந்தால் பொதுக்கூட்டம், பேசினால் மாநாடு. தமிழகம் இன்று ஓர் எளிமையான, வலிமையான முதல்வரை பெற்றுள்ளது.’ என்றெல்லாம் ஆரம்பித்து தாறுமாறாக முதல்வரை புகழ்ந்து கொண்டிருக்கிறார். 

மோடியை டாடி! என்று சொன்னால் விமர்சனத்துக்கு கழகம் ஆளாகும் என்று தெரிந்தே செய்த பாலாஜி, முதல்வரை அப்படியிப்படி என சினிமாத்தனமாக புகழ்வதன் மூலம் எதிர்கட்சிகளை இதற்கு எதிர்விமர்சனம் செய்ய தூண்டிவிட்டு, முதல்வரின் புகழை தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கிட இவர் முயற்சிக்கிறாரோ? என்று எங்களுக்கு தோன்றுகிறது.  

ராஜேந்திர பாலாஜியை, தினகரன் ஆதரவு ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் பட்டியலில் துவக்கத்தில் இருந்தே அரசியல் விமர்சகர்கள் வைத்திருந்ததை கவனிக்க வேண்டும். தினகரன் மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினால் தங்களின் முகம் வெளிப்பட்டுவிடும் என்பதால், கட்சியை இப்படி விமர்சனத்துக்கு உள்ளாக்கும் தொனியில் பேசி, அ.தி.மு.க.வினுள் பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பதும் தினகரன் டீமுக்கு இவர்கள் செய்யும் சாதகம்தானே?

ஒருவேளை அதைத்தான் செய்கிறாரோ ராஜேந்திரபாலாஜி? என்று எங்களுக்கு சந்தேகமாகிறது.” என்கிறார்கள். 
நல்ல டவுட்டுதான்!