மற்ற கட்சிகளை வேண்டுமானால் திமுக சுமந்திருக்கலாம், இந்தத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவைச் சுமந்தது. திமுக, காங்கிரஸை சுமக்கவில்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் குடிநீர்ப் பிரச்னையைக் கண்டித்து தி.மு.க சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திருச்சியில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், இனி எத்தனை ஆண்டு காலம்தான் காங்கிரசுக்குப் பல்லக்குத் தூக்குவது? நாங்க எங்க போவது? ரோட்டில் நிற்பதா? குச்சிமிட்டாய் வாயில் வைத்துக்கொள்வதா? என்னைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். அப்படியில்லையென்றால் திருச்சியில் மட்டுமாவது திமுக தனித்துப் போட்டியிட அனுமதி கொடுங்கள் எனத் தலைவர் ஸ்டாலினிடம் கேட்க உள்ளேன் என கே.என்.நேரு பேசியது தி,மு.க காங்கிரஸ் கூட்டணியில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இதற்கு கருத்தணு தெரிவிக்கும் விதமாக சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி;   பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற பல்லக்கைத் தூக்கியதால்தான் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். 

நேரு குடும்பம்; ராஜீவ் குடும்பம்; அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக மக்கள் அளித்த வாக்குகள்தான், திமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவைச் சுமந்தது. திமுக, காங்கிரஸை சுமக்கவில்லை. மற்ற கட்சிகளை வேண்டுமானால் திமுக சுமந்திருக்கலாம் என்றார்.