மோடி எங்களின் டாடி என சொன்னது போல எடப்பாடி எடப்பாடியின் தம்பி நான் என பொங்கி எழுந்திருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. ஓட்டப்பிடாரத்தில் இறுதி நாள் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் பாலாஜி.

“பித்தலாட்ட அரசியல் செய்கிறார் தினகரன் அவருக்கு சாதகமான கருத்துக்களை தெரிவிப்பவர்களை மட்டுமே பிடிக்கும் . முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரை கட்சியை விட்டு நீக்கியது மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சித்து உள்ளார். இன்று ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்றும் சொல்கிறார் டி.டி.வி. தி.மு.க. செய்கிற வேலையைத்தான் தினகரன் செய்கிறார்.

தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் கிடையாது. ஜெயலலிதா பெயரை சொல்லும் அருகதை தினகரனுக்கு கிடையாது.

மக்கள் நீதிமய்யம் சார்பில் என் மீது போடப்பட்டு உள்ள வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர் பக்தர், ஜெயலலிதா தொண்டர்கள், எடப்பாடியாரின் தம்பிகள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மாற்றம் வரும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எளிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று தமிழகமக்கள் விரும்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மக்கள் ரோட்டில் வந்து நிற்கிறார்கள். 

அ.தி.மு.க.வின் பின்னால் மக்கள் இயக்கமானது உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மக்கள் தீர்ப்பு அமையும் இன்னும் சில நாட்களில் வர போகிறது”என முடித்தார்.