மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு, தமிழ்நாடு மட்டும் எப்போதுமே சவாலான மாநிலமாக இருந்துவந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் காலூன்றுவதில் பாஜக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரம் காட்டிவருகிறது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் பாஜக, அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமைக்க வைப்பதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடக்கவுள்ள புதுச்சேரியில் ஆட்சியமைப்பதில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது.

புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வரும் ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரியில் தீவிர களப்பணியில் ஈடுபட்டுவருகிறார். இன்று சென்னையில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சந்திரசேகர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விளாசினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், திமுகவும் ஸ்டாலினும் சிங்கார சென்னை, சிங்கார தமிழ்நாடு என்று பேசுகிறார்கள். ஆனால் திமுகவோ, காங்கிரஸோ மக்களின் நலனுக்காகவோ, வளர்ச்சிக்காகவோ செயல்படும் கட்சிகள் அல்ல. 2004ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாய்பாய் ஆட்சி முடியும்போது, இந்திய பொருளாதாரம், உலகளவில் வேகமாக வளர்ந்த பொருளாதாரமாக இருந்தது. ஆனால் 2004ல் ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ்,  நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் செய்தனர். ஆனால் நரேந்திர மோடி அரசு, ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நேர்மையாக நடத்தியது. திமுக "Rising Sun" இல்லை; "Rising Sons". மக்கள் நலனிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தாமல் வாரிசுகளை வளர்த்தெடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் கட்சி திமுக. திமுக மட்டுமல்ல; காங்கிரஸும் வாரிசுகளை மட்டுமே வளர்த்தெடுக்கும் கட்சிதான் என்று ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக விளாசினார்.