ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி... ஆட்டு சந்தை அரசியலில் பாஜக... காங்கிரஸ் முதல்வர் பகீர் குற்றச்சாட்டு!
“கொரோனா வைரஸுக்கு எதிராக மாநில அரசு போராடி வருகிறது. ஆனால், பாஜகவோ எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. அக்கட்சி எல்லை மீறி ஆட்டுச் சந்தை அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014-க்கு முன்பு மறைமுகமாக பாஜக செய்ததை, இப்போது மோசமான முறையில் செயல்படுத்தி வருகிறது."
ராஜஸ்தானில் தனது தலைமையிலான அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்துவருவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டில் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. 200 இடங்கள் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் ராஷ்டிரிய லோக் தள், சிபிஎம், பாரதிய ட்ரைபல் கட்சி, 12 சுயேட்சைகள் என 17 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்துவருகிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு, அதே பாணியில் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க பா.ஜ.க முயற்சி செய்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா வைரஸுக்கு எதிராக மாநில அரசு போராடி வருகிறது. ஆனால், பாஜகவோ எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. அக்கட்சி எல்லை மீறி ஆட்டுச் சந்தை அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014-க்கு முன்பு மறைமுகமாக பாஜக செய்ததை, இப்போது மோசமான முறையில் செயல்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டியுள்ளது பா.ஜ.க. ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிக அளவு பணம் தருவதாக பேச்சு எழுகிறது. ஒரு சில எம்எல்ஏக்களுக்கு 15 கோடி ரூபாய் வரை கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தெரிகிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மாநிலங்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. ராஜஸ்தானிலும் அதையே செய்ய நினைக்கிறார்கள். ஆனால், அதை காங்கிரஸ் கட்சி தடுத்துவருகிறது. ஆனால், அந்த முயற்சியை பாஜக கைவிடவில்லை. மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜகவின் இந்த ஆணவப் போக்கு உடைக்கப்படும். பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.