ரூ.20 டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றோம் என கூறியதற்கு என்னிடம் தொலைபேசியில் ராஜசேகரன் மன்னிப்பு கேட்டார் எனவும்  தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ராஜசேகரன் அவ்வாறு பேசியுள்ளார் எனவும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே நகர் இடைதேர்தலில்,டிடிவி தினகரன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரது வெற்றி குறித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், ஆர்.கே நகர் மக்களுக்கு பணம்  கொடுத்து தான் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார் எனவும் குற்றம் சாட்டினர்.

இதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்து வந்தார். பின்னர் ரூ.20 நோட்டு மூலம் டோக்கன் வழங்கப்பட்டு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் வந்தது. இதற்கும் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில்,முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகர் ரூ.20 டோக்கன் வழங்கியது உண்மைதான்  என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். 

மேலும், ரூ.20 டோக்கன் திட்டம் முக்கிய  நிர்வாகிகளின் மாஸ்டர் ப்ளான்  என்றும், எதிர்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடிக்கவே ஜெ. சிகிச்சை குறித்த வீடியோ வெளியிடப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், ரூ.20 டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றோம் என கூறியதற்கு என்னிடம் தொலைபேசியில் ராஜசேகரன் மன்னிப்பு கேட்டார் எனவும்  தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ராஜசேகரன் அவ்வாறு பேசியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.