rajasekar said Kamal is a honest politician

கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்த சீனியர் வழக்கறிஞர் ராஜசேகர், கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். கமலின் வேகத்துக்கு தன்னால் ஈடு கொடுத்து ஓடமுடியவில்லை! அதான் களத்திலிருந்து விலகிவிட்டேன்! என்று ரன் அவுட் ஆனவராய் பேசியிருந்தார். 

ஆனாலும் ஏற்கனவே கமலை வெச்சு செய்யும் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோருக்கு, ராஜசேகர் கழண்று கொண்ட விவகாரம் பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. ராஜசேகரின் விலகலுக்கு ஆயிரத்தெட்டு காரணங்களை சொல்லி கமலை கன்னாபின்னாவென தாளித்து எடுக்கிறார்கள். ’ஒரு நிர்வாகியை ரெண்டு மாசங் கூட தாக்குபிடிக்க வைக்க தெரியாத கமல் என்னத்த கட்சிய நடத்தி! என்னத்த கிழிக்கப்போறார்?’ என்கிற ரேஞ்சுக்கு போட்டுப் பொளக்கிறார்கள். 

இந்நிலையில், தான் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது பற்றி விரிவாக பேசியிருக்கும் ராஜசேகர் “என்னால் அரசியல், வழக்கறிஞர் தொழில் என்று ரெட்டை குதிரை சவாரி செய்ய முடியவில்லை. கமல் மிக வேகமாக செயல்படுகிறார். அவருக்கு நிகராக என்னால் நூறு சதவீத பங்களிப்பை தரமுடியவில்லை. கூடவே பொருளாதாரமும் கையைக் கடிக்கிறது. அதனால்தான் விலகினேன். 

என்னுடைய உழைப்பை கமல் அங்கீகரிக்கவில்லையா? என்று கேட்கிறார்கள். உழைப்பு என்பதற்கு கமல் என்ன அளவுகோல் வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. திருச்சி மேடையில் ஸ்ரீப்ரியா, கமீலா நாசரையெல்லாம் பேச வைத்தவர் என்னை பேச வைக்கவில்லை. அது அவரது முடிவு. இதைத்தாண்டி வேறென்ன சொல்ல? எனக்கு பின்னால் அந்த கட்சிக்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே என்று நான் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. 

கமலைச்சுற்றி ஒரு வட்டம் உள்ளது. அவர்கள், அவரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அது எனக்கு தெரியாது. அங்கே இருந்த 15 பேரில் நான் மட்டுமே அரசியல் பின்புலம் உள்ளவன். யாரையும் எனக்குப் போட்டியாக நான் கருதவில்லை. 
தான் எடுக்கும் முடிவே ஃபைனலானது என்று, கமல் இன்னொரு ஜெயலலிதா போல் நடந்து கொள்கிறார் என்று ஒரு விமர்சனம் வருகிறது. இல்லை அவர் இன்னொரு ஜெயலலிதா இல்லை, நிச்சயம் அவர் கமல்ஹாசன் தான். 
அரசியலில் நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார் கமல். தற்கால அரசியலில் இது சாத்தியமே இல்லை. சற்று நீக்குப் போக்காக இருந்தால்தான் பலரையும் அரவணைத்து சென்று இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியும். எனவே கமல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று அட்வைஸியிருக்கிறார். 
எப்பூடி!