ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் குடும்பத்தினர் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கப்பாண்டியன். இவர், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம்  தன் தொகுதியில், 3 மாதங்களாக, தினமும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சில அறிகுறிகள் காணப்பட்டது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எம்.எல்.ஏ. மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வும் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்த கார்த்திகேயன் மற்றும் செய்யூர் தொகுதி ஆர்.டி.அரசு, செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, எம்.எல்.ஏ.  தங்கப்பாண்டியன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து திமுகவினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.