துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். 

சமீபத்தில் அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ஜெயலலிதாவுக்கு இருந்த ஆளுமைத் திறன் இப்போது கட்சிக்குள் யாருக்குமே இல்லை. அதனால், பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும் என்றார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரனும் கூறியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், சந்தர்ப்பவாதத்துக்காக இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். இப்போது அது வெளியே தெரிந்துவிட்டது. எவ்வளவு நாள்தான் வெளியே தெரியாமல் மறைத்து வைக்க முடியும். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

ஓ.பன்னீர் செல்வம், ராஜன் செல்லப்பாவை வைத்து இப்படிப் பேசு என்று சொல்கிறார். ஓபிஎஸ் தனியாக டெல்லிக்குச் சென்றார். ஈபிஎஸ் தனியாக டெல்லிக்குச் சென்றார். இருவரும் தனித்தனியே சென்று அமர்ந்தனர். ஈபிஎஸ் போகும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொள்வதில்லை. ஓ.பி.எஸ். செல்லும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.