அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷத்தை எழுப்பி அருகில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வை அலற வைத்திருக்கிறார் ராஜன் செல்லப்பா. 

மதுரை கிழக்கு மாவட்ட, அதிமுக., செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பா, 'கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை' என சமீபத்தில் பரபரப்பாக பேட்டி கொடுத்தார். அதற்கு முன் அவரது, எம்.எல்.ஏ அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளோட ஆலோசனை நடத்த போவதாக அனைவருக்கும் அழைப்பு போயிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள், எம்.எல்.ஏ.,வும், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலருமான தமிழரசனும் போயிருக்கிறார். 'கூட்டம் முடிந்து ராஜன் செல்லப்பா பேட்டி தருவதற்கு முன், அவர் அருகிலேயே உட்கார்ந்திருந்த தமிழரசன், 'ஒற்றை தலைமை' என ராஜன் செல்லப்பா குண்டை துாக்கி போட்டதும் வெலவெலத்து போய் விட்டார்.

ராஜன் செல்லப்பா ஒற்றை தலைமை பேச்சை ஆரம்பித்ததை அவர் எதிர்பார்க்கவே இல்லை. இதனால் சட்டென எழுந்து மொபைல் போனில் பேசுவதை போல நகர்ந்து, வெளியில் சென்று அவசர அவசரமாகக் காரில் ஏறிக் கிளம்பி விட்டார். அப்போது முதல் ராஜன் செல்லப்பா அழைத்தும் அவர் பேசவே இல்லை எனக் கூறப்படுகிறது.