இரட்டைத் தலைமை இருந்ததால்தான் அதிமுக மக்களவைத் தேர்தலில் தோற்றுவிட்டது என்றும் ஒற்றைத் தலைமைதான் கட்சிக்கு நன்மை பயக்கும் என்று  மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா திடீரென பேட்டி அளித்து கட்சித் தலைமைக்கு பீதியை உண்டாக்கினார்.

இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் பலர்  இது குறித்து பேசத் தொடங்கினர். ஆனால் இதைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இரட்டைத் தலைமைதான் நீடிக்கும் என்றும். இது குறித்து யாரும் பேசக் கூடாது என்றும் முடிவு செய்து பிரச்சனைக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜன் செல்லப்பா  இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்து போர்க் கொடி தூக்கியதற்கு என்ன காரணம் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பாவின் ஆளுகைக்குள் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. ராஜன் செல்லப்பா தன் மகனுக்கு எம்.பி. வேட்பாளராக சீட் பெற்றபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடம் இருந்த 3 சட்டமன்ற தொகுதிகளைப் பிரித்து ஓபிஎஸ்ன் ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.


 
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக உதயகுமார் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் தன் மகனுக்கு சீட் கிடைத்த சந்தோஷத்தில் ராஜன் செல்லப்பா அமைதியாக இருந்துவிட்டார்.

தற்போது அவரது  மகன் தோல்வி அடைந்ததால் கோபமான அவர் தனது வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தன்னிடம் இருந்த பிரித்துக் கொடுக்கப்பட்ட 3 தொகுதிகளை திரும்பத் தர வேண்டும் என்றும் ஆந்திரா பாணியில் தனக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று அடம் பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.