தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில், பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 5-ந் தேதி இரவு ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்து உள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது.

நிகழ்ச்சியில் பிஜேபியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு ராமலிங்கத்தின் மனைவி சித்ரா, மகன்கள் ஷியாம் சுந்தர், மலர்மன்னன், இளவரசன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். இதில் உலகளாவிய இந்து அமைப்புகளின் மூலம் திரட்டப்பட்ட ரூ.56 லட்சம் நிதி உதவியை ஆன்லைன் மூலமாக ராமலிங்கத்தின் மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதற்கான ஆவணத்தை ஹெச்.ராஜா, ராமலிங்கத்தின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.