raid in poes garden... edappadi palanisamy in meenakshiyamman temple
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரிதுறையினர் அதிரடியாக சோதனை நடத்திக் கொண்டிருக்க, அவர் வழியில் ஆட்சி செய்வதாக கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹாயாக சாமி கொண்டிருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகளில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய ரெய்டு மேளா தொடர்ந்து 5 நாட்கள் நீடித்தது.
இதில் ஏராளமான சொத்து ஆவணங்கள், நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக தகவல்ககள் வெளியாகியுள்ளன.

இந்த ரெய்டின் உச்சகட்டமாக நேற்றிரவு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்திற்குள்ளேயே வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.
நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான இளவரசியின் மகள் ஷகிலா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரை அழைத்துக் கொண்டு போய்ஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைந்த அதிகாரிகள் தங்கள் அதிரடியைத் தொடங்கினர்.
முதலில் பூங்குன்றன் அறையை சோதனையிட்ட அதிகாரிகள் பின்னர் சசிகலாவின் அறையையும் சல்லடை போட்டு தேடத் தொடங்கினர். அங்கிருந்த லேப்டாப், பென் டிரைவ் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். அது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவிற்கு வந்த சில கடிதங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த ரெய்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி போய்ஸ் கார்டனே பரபரத்துக்கிடக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூலாக இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் சகிதம் வந்து சாமி கும்பிட்டார்.
சிவகங்கையில் இன்று நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர்,நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அவர், போயஸ் கார்டன் ரெய்டு குறித்தோ, அல்லது கடிதங்கள், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதாவால் முதலமைச்சரான எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் என யாருமே இந்த ரெய்டு குறித்து வாய்திறக்காதது அல்லது கண்டனம் தெரிவிக்காதது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
