திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்தற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 4ந்தேதி சென்னையில் நடைபெற்றது. உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. இதனால் முதன்முறையாக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கட்சியின் செயல்தலைவராக ஸ்டாலினின் பெயரை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிந்தார். இதனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரை முருகன் வழிமொழிந்து, உருக்கமாக பேசினார். 

தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக கட்சியின் விதி எண் 18 திருத்தம் செய்யப்பட்டது. 

இதையடுத்து, திமுகவின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினை தொலைப்பேசி வாயிலாக இன்று தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.