rahul will be the chief of congress party in November

நீண்ட நாட்களாக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி, விரைவில் அக்கட்சியின் தலைவராக பொறுபேற்பார் என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சிப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தி வயது காரணமாக முன்பு போல் உற்சாகமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவதிவில்லை. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பார் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் , முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.



நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா காந்தியிடம், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி எப்போது பொறுப்பேற்ப்பார் என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த சோனியா, எல்லாம் விரைவில் நடக்கும் என கூறினார்.

 இதையடுத்து வரும் நவம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் , ராகுல் காந்தி தலைவரான பிறகு கூட, சோனியா அரசியலில் தொடர்ந்து செயல்படுவார் என்றும் அக்கட்சியின் பணிக்குழு உறுப்பினராகவும், நாடாளுமன்றக் குழுவின் காங்கிரஸ் தலைவராகவும் நீடிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.