காங்கிரஸ் கட்சி இனி மீளுமா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் இளைஞர்களுக்கு பொறுப்புகளை வழங்கி புத்துயிர் ஊட்ட முடிவெடுத்து இருக்கிறார் ராகுல் காந்தி.

 

காங்கிரஸ் கட்சியின் வரலாறு, கொள்கைகள், சாதனைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி இருந்தால் பாஜக வெற்றியில் 50 சதவீதத்தை தடுத்து இருக்காலம் எனக் கருதுகிறார் ராகுல் காந்தி.

 

ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநில தலைவர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. குறிப்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தங்களது மகன்களுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். அவர்கள் கட்சிக்காக சரியாக உழைக்கவில்லை என ராகுல் காந்தி ஆவேசத்துடன் இருக்கிறார். 

அத்தோடு பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்கட்சி பூசல் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்ததாக கட்சி தலைமை கருதுகிறது. இந்தநிலையில், தேர்தலில் முழு மனதோடு உழைக்காத மூத்த தலைவர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு அப்பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. கேரளா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல்காந்தி, டெல்லி திரும்பியதும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது