rahul gandhi will not have political future

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இனி அரசியல் எதிர்காலமே கிடையாது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துவருகின்றன. 

ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் எந்த தேர்தலிலும் எதிரொலிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 22, 24, 29 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியது. எஞ்சிய இரண்டில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கைப்பற்றியது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

பாஜக வென்ற 14 மாநகராட்சிகளில், ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதி மாநகராட்சியும் ஒன்று. ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான அமேதி மாநகராட்சியில் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை.

இதுதொடர்பாக பேசியுள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றி, பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கிடைத்தது. ராகுலின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியிலிருந்து ராகுல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இனி ராகுலுக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது என விமர்சித்தார்.