கொரோனா வைரஸைத் தடுக்க வேகமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க முடியாமல் போனதற்கு  நம் தேசம் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலகை பீதிக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மெல்ல அதிகரித்துவருகிறது. உலக அளவில் 2 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 152 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. 
பொதுஇடங்களில் மக்கள் கூடுவதைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. திரையரங்குகள், பயிற்சிக் கூடங்கள், மால்கள், வணிக வளாகங்கள், பார்கள் ஆகியவற்றை மூட அரசுகள் உத்தரவிட்டுள்ளன. வழிபாட்டு தலங்களுக்கு வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸால் இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். 


இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பக்கத்தில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேகமான, வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டியது மிக அவசியம். ஆனால், கொரோனா வைரஸைத் தடுக்க வேகமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க முடியாமல் போனதற்கு  நம் தேசம் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்” என ராகுல் தெரிவித்துள்ளார்.