மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் கடுமையான பாதிப்பு ஏற்படப்போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொருளாதார சுனாமி ஏற்பட போகிறது என்ற தன் எச்சரிக்கையை பாஜக ஊடகங்கள் கேலி  செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைராஸால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு குறித்து எச்சரிக்கும் வகையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- நாட்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளன. வங்கிகளும் பெருளாதார சிக்கலில் தவிக்கின்றன, பொருளாதாரத்தை அழிக்கும் ஒரு சுனாமி வருவப்போவதாக நான் பல மாதங்களுக்கு முன்பே கூறினேன், 

நாட்டில் ஏற்பட போகிற ஆபத்து குறித்து நான் எச்சரித்தபோது பாஜக ஊடகங்கள் என்னை கேலி செய்தன, இப்போதும் அப்படியே நடக்கிறது, நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்திக்கப்போகிறது, அரசாங்கத்தின் தவறான பொருளாதார மேலாண்மை திட்டங்கள், மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கப்போகிறது. ஆனால் நான் கூறுவது ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ள அவர், நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்ற தனது எச்சரிக்கை தொடர்பாக சில தகவல்களையும் டுவிட்டரில் இணைத்துள்ளார். அதில், மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மை மில்லியன் கணக்கான குடும்பங்களை அழிக்கப் போகும் சோகம் ஏற்படப்போகிறது, ஆனால் இது அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்திய குடும்பங்களின் வருமானம் பற்றிய தரவுகள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்  நாட்டில் 10-ல் 8 இந்திய குடும்பங்கள் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். நகர்ப்புறங்களை விட கிராமப்புற குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக கடுமையான வறுமை நிலைமை பின்னோக்கிய நிலையில் செல்வதை பார்க்க முடிகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை, புத்துயிர் மற்றும் வளர்ச்சியின் பாதையில் கொண்டு வருவதற்கு சாதகமான கொள்கை நடவடிக்கைகளுடன் எதிர்வரும் காலங்களில் மேலும் சாதகமான மறுமலர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியம் ஐ.எம்.எப் அறிக்கையின்படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2020-இல் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பிட்டைவிட 6.4 சதவீதம் குறைவு ஆகும்.