மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் எனும் இடத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட வாஜ்பாய் உடல் இறுதி அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இதே போல் பூடான் மன்னர் வாங்சுக், பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், இந்தியாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

அப்போது வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும்விதமாக தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று கொண்டிருந்தனர். இதே போல் ராகுல் காந்தியும் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு அருகே மன்மோகன் சிங் நின்று கொண்டிருந்தார். அனைவரும் சோகமாக நின்று கொண்டிருந்த நேரத்தில், திடீரென ராகுல் காந்தி சிரிக்க ஆரம்பித்தார். இதனால் அவருக்கு அருகே நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் ராகுல் அவர்களை கவனிக்காமல், எதையோ நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ராகுல் காந்தி தற்போதும் அரசியல் முதிர்ச்சி அற்று இருப்பதையே இது காட்டுகிறது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.