மேக் இன் இந்தியா என்று பேசி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, தற்போது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதையே நித்தமும் செய்து வருகிறது என மோடி அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 
இந்தியாவின் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி சீன ராணுவத்தினர் தாக்கியதில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் இந்த அத்துமீறல் நாடு முழுவதும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும்படி பாஜக பிரசாரத்தை முன்னெடுத்தது. இந்நிலையில் இந்தியாவில் 59 சீன செயலிகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. 20 வீரர்களைக் கொன்ற சீனாவுக்கு எதிராக அரசின் நடவடிக்கை செயலிகளை தடை செய்வதா என்று சமூக ஊடகங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் பலரும் கருத்திட்டு வருகிறார்கள். 
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சீனப் பொருட்கள் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது என்பதை விளக்கும் வகையில் ராகுல் பதிவிட்டுள்ளார். 2008 - 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதி விகிதம் வெறும் 12 சதவீதம்தான். ஆனால், 2014-க்கு பிறகு இதுவரை பாஜக ஆட்சியில் 18 சதவிகிதத்துக்கும் அதிகமாக சீனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என வரைப்படத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

 
அதில், “உண்மைகள் எப்போதும் பொய் சொல்லாது. மேக் இன் இந்தியா என்று பேசி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, தற்போது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதையே நித்தமும் செய்து வருகிறது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.