காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் பாகிஸ்தான் உள்பட எந்த ஒரு நாடும் தலையிட அனுமதி இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மத்திய பா.ஜ.க அரசு காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்சினை. இதில் 3-வது நாடு தலையிட அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ’’காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் பாகிஸ்தான் உள்பட எந்த வெளிநாடும் தலையிட அனுமதி இல்லை. மத்திய அரசுடன் எனக்கு பல்வேறு வி‌ஷயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தில் எனது நிலைப்பாடு இதுதான்.

ஜம்மு -காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வன்முறைகள் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலும், ஆதரவாலும் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவாக இருந்து வருகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.