ராகுல் காந்தி இந்தியாவைச் சேர்ந்தவரா.?,  யார் மடியில் அமரவைத்து அவருக்கு மொட்டை அடித்தார்கள் என்று யாராவது சொல்லமுடியுமா என்று  தனியார் தொலைக்காட்சி பேட்டியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிக்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி ஒன்று கொடுத்திருந்தார் அதில் பேசிய அவர்.  ”சந்திராயன் 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவால்  இஸ்ரோ தலைவர் சிவன் நொறுங்கிப் போனார் அப்போது பிரதமர் மோடி அவர்கள் சிவனை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். நாடே உங்களுக்கு துணையாக நிற்றுகும் என சிவனை தேற்றினார்.  இந்த அன்புதான் பிரதமரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. அவர் இந்த அளவிற்கு உணர்ச்சிவயப்பட்டதற்கு காரணம் அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால்தான், மோடி ஒரு இந்தியன் என்பதால் தான்” என கூறிய அமைச்சர் ”அதே இடத்தில் ராகுல் காந்தி இருந்திருந்தால்  அப்படி நடந்திருப்பாரா.? சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறியிருப்பாரா..?  நிச்சயம் செய்திருக்க மாட்டார். ஏன் என்றால்.?  அவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. அவர் வெளிநாட்டுக்காரர் அதனால் அவருக்கு இந்த உணர்வெல்லாம்  இருக்காது” என்றார்.

 

அப்போது குறிக்கிட்ட செய்தியாளர்,  எதை வைத்து ராகுல் காந்தியை  இந்தியர் இல்லை என்று சொல்கிறார்கள், என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  ”ராகுல் காந்தி இந்தியாவில் பிறந்தவர் அல்ல. அவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே வெளிநாட்டில் தான்” என்று பகீர் கிளப்பினார்.

அமைச்சரை மீண்டும் இடைமறித்த செய்தியாளர் ,ராகுல் காந்தி குறித்து தவறாக தகவல் பதிவு செய்ய வேண்டாம். ராகுல் காந்தி, இந்தியாவில்தான் பிறந்தார், இந்தியாவில்தான் வளர்ந்தார், இந்தியாவில்தான் படித்தார், அவர் இந்தியர் தான் அவரைப்பற்றி தவறான தகவல்களை பதிவு செய்ய வேண்டாம் என்று அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அனால் அதை ஏற்க மறுத்த  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  ”அப்படியென்றால் ராகுல்காந்திக்கு இந்தியாவில் எங்குவைத்து யார் மடியில் அமர வைத்து மொட்டை அடித்தார்கள்  என்று யாராவது சொல்ல முடியுமா.?  எனக்கு என் தாய்மாமன் மடியில் அமர வைத்து மொட்டையடித்தார்கள் அப்படி ராகுல் காந்திக்கு மொட்டை அடித்தார்களா...” என்று செய்தியாளரை பார்த்து சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் கேள்வி எழுப்பினார்.

 

இறுதியில்  ராகுல் காந்தி இந்தியர் இல்லை என்றும் அவர் இந்தியாவை ஆள அவருக்கு உரிமை இல்லை என்றும் கூறிய ராஜேந்திர பாலாஜி அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பேட்டியை நிறைவு செய்தார்.