“தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒலித்தார். நாடாளுமன்றத்தில் ஒரு சிங்கத்தைப்போல அவர் முழங்கினார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."
திராவிட இயக்க வழக்கப்படி ராகுல் காந்தியை நான் தம்பி என்றும், முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்று அழைக்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டிலிருந்து புத்தகத்தை எடுத்து, ராகுல் காந்தி அந்தப் புத்தகத்தை வெளியிட்டார். அதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், “தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒலித்தார். நாடாளுமன்றத்தில் ஒரு சிங்கத்தைப்போல அவர் முழங்கினார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார், சமூக நீதி, காரல் மார்க்ஸை படித்தவர்கள் எல்லாம் சிறந்த மனிதர்களாக இருக்க முடியும். நாம் மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் முதலில் மனிதநேயம் நமக்குள் இருக்க வேண்டும். பெரியாரின் சமூக நீதியையும் காரல் மாக்ஸின் பொருளாதார கொள்கைகளையும் படிக்க வேண்டும். அப்படி படித்தால் மட்டுமே நம்மால் அப்படி இருக்க முடியும். திமுகவில் எல்லாரும் அண்ணாவின் - தம்பி என்று அழைத்துக்கொள்வார்கள். திராவிட இயக்க வழக்கப்படி ராகுல் காந்தியை நான் தம்பி என்றும், முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்று அழைக்கிறேன்.” என்று கலகலப்பாக சத்யராஜ் பேசினார்.

மேலும் ‘உங்களின் ஒருவன்’ புத்தகத்தில் ஸ்டாலின் என்ற பெயர் சூட்டப்பட்ட சம்பவம், பள்ளியில் சேர ஸ்டாலின் என்ற பெயர் இடையூறாக இருந்தது, அதற்காக பள்ளி மாற்றப்பட்ட விவரம், தெருக்களில் மு.க.ஸ்டாலின் போட்ட மேடை நாடகங்கள், ஸ்டாலினை எம்.ஜி.ஆர் பாராட்டிய சம்பவம் உள்ளிட்ட விவரங்களையும் சத்யராஜ் நினைவு கூர்ந்து பேசினார்.
